ஒன்றை நினைக்கின்...
"
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். "
ஒன்றை நினைக்கின்...
வெறுமையின் விளைச்சலில் வினாடிப் பூக்கள்
விருவிரு வென்றே விரைந்தன கோடி!
புதிராய்ப் பிறந்த புதுநொடி யாவும்
அதிரடி யாக அண்டம் நிரப்பின!
வந்ததன் நோக்கம் வகையெதும் அறியாது
நொந்தன நொடிகள்! நொடித்து வீழ்ந்தன!
ஒன்றினை ஒன்றாய் உண்டிடும் போக்கில்
கொன்று குவித்திடும் குறுநொடி கோடி!
புதிதாய்த் தோன்றியும் புதிர் அவிழாமல்
எதிராய்ப் புதிர்கள் இன்னும் மிகுத்தன! (10)
இக்கணம் கண்ட இன்பப் போக்கைத்
தக்க வைத்திடத் தரணியில் தவிப்பு!
வேண்டும் என்றுளம் விழைபவை யாவும்
தாண்டும் நொடியில் தடம்புரண் டழியும்!
மாற்றம் என்னும் மாயை காட்டும்
தோற்றப் பிழையால் தோற்றிடும் உலகம்!
ஒன்றை நினைக்க உருவொழித் ததுவும்
தன்னைப் பிறிதோர் தரத்தில் ஈயும்!
கோடி கணங்களில் குறையாய் ஒருமுறை
தேடும் பொருளே தெரியவும் கூடும்! (20)
நொடிகள் மனங்கள் நிகழ்விவை மூன்றும்
தொடுதலின் போக்கே தோன்றும் மாயைகள்!
எத்தனை நொடிகள்! எத்தனை மனங்கள்!
எத்தனை நிகழ்வுகள்! எண்ணள வில்லை!
அத்தனை முறையும் அவைகள் தமக்குள்
முத்தம் பதிக்க முகிழ்ப்பவை யாவும்!
நலமும் கெடுதியும் நன்றும் அன்றும்
உளத்தின் போக்கில் உணர்பவை ஆமே!
ஞாலம் என்னும் நன்னீர் ஆற்றில்
காலம் மெய்யதன் காட்சிகள் பொய்யே! (30)
பெருங்கடல் வரைதான் பேய்கதி வெள்ளம்!
விரையும் போக்கின் விலையாய்த் துயர்கள்!
ஒன்றை நினைக்கின் ஒன்றே தெரியும்!
தன்னைச் சுற்றும் தடைகள் அவிழும்!
பிறப்பும் நிகழ்வும் இறப்பின் போக்கும்
துறக்க இயலாத் துணையெனக் காண்க!
இன்பம் துன்பம் இரண்டையும் சமமாய்
என்றும் நடத்தும் இயல்புடை தேவன்
மன்றம் தன்னில் மகிழ்வுடன் ஆடும்
கொன்றை வேந்தன் கோள்களின் கோவே!
Comments
Post a Comment